புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் நிகழ்ந்தபோது சீனா பாகிஸ்தானுக்கு ஆகாயத் தற்காப்பு மற்றும் செயற்கைக்கோள் ஆதரவை வழங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் சீனாவின் நேரடித் தலையீடு அதிகமாக இருந்தது என்று இந்தியாவின் தற்காப்பு அமைச்சின்கீழ் இயங்கும் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்று தெரிவித்து உள்ளது.
இந்தியா ஏவும் ஆயுதங்களைக் கண்டறியும் விதமாக பாகிஸ்தானின் வான்வெளிக் கண்காணிப்பு மற்றும் ஆகாயத் தற்காப்புக் கருவிகளைச் சரிசெய்து அவை அதிக ஆற்றலுடன் இயங்க சீனா உதவியதாக டாக்டர் அசோக் குமார் கூறியுள்ளார்.
டெல்லியைத் தளமாகக் கொண்ட போர் தொடர்பான கூட்டு ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் அவர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தற்போது தணிந்து உள்ளது. மோதலின் போது இரு நாடுகளும் எதிர்த்தரப்புக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் எதிர்த் தாக்குதல் நடத்திய போது, இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
அந்த மோதலில் பல்வேறு வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இரு நாடுகளுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் வானூர்திகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீனமானவை என்று கூறப்படுகிறது.