புதுடெல்லி: பூமியிலிருந்து எடுக்கப்படும் அரிய வகை கனிமங்களின் விநியோகத்தை சீனா நிறுத்திவிட்டதால் சொந்தமாகக் கனிமங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கனிமவளத் திரட்டு நடவடிக்கைக்கான சாத்தியங்களை இந்தியா ஆராய்ந்து வருகிறது.
சீனா தனது கனிம, காந்த விநியோகத்தை நிறுத்திவிட்டதால் இந்தியாவின் வாகனத் துறையிலும் மின்னணுத் துறையிலும் பாதிப்புகள் தென்படத் தொடங்கிவிட்டன.
சொந்தமாக அரியவகைக் கனிமங்களை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டாலும் அது அவ்வளவு எளிதானதல்ல. மேலும், ஒருசில ஆண்டுகளில் அதனைச் செய்துவிட இயலாது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அரியவகை கனிமங்கள் எந்தெந்தப் பகுதிகளில் பூமிக்குள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தோண்டி எடுத்து, தரம் பிரிக்க வேண்டும். தோண்டி எடுக்கும்போதும் தரம் பிரிக்கும்போதும் வெளியாகக்கூடிய கழிவுகள் ஆபத்தானவை.
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், கனிம உற்பத்தி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்கத் தொடங்கி உள்ளது.
அரிய வகைக் கனிமங்களை உள்நாட்டில் தயாரிக்க 13.45 பில்லியன் ரூபாய் (S$200 மில்லியன்) உதவி மானியம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய கனரகத் தொழிற்துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) செய்தியாளர்களிடம் கூறினார்.