பெய்ஜிங்: பேச்சுவார்த்தை மூலம் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், நியாயமாகவும் நேர்மையாகவும் வேறுபாடுகளை நிர்வகிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) தெரிவித்துள்ளது.
எல்லை விவகாரங்கள் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே இவ்வாரம் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லை மோதல்களால் இருநாட்டு உறவு கசப்படைந்த பிறகு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பெய்ஜிங்கில் புதன்கிழமை (டிசம்பர் 18) “சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை” முறையின் கீழ் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உள்ளனர்.
“இரு நாட்டுத் தலைவர்களின் முக்கியமான கருத்திணக்கம், பரஸ்பரம் மரியாதை செலுத்துதல், முக்கிய நலன்களையும் முக்கிய அக்கறைகளையும் மதித்தல், இருதரப்பு உறவை மீண்டும் ஒரு நிலையான - ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதைக்கு விரைவில் இட்டுச் செல்லுதல் ஆகியவற்றை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்று லின் கூறினார்.
இரு நாடுகளும் தங்கள் சர்ச்சைக்குரிய எல்லையில் காவல் பணியை நிறுத்தி, நான்கு ஆண்டுகால ராணுவ நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த ஒப்பந்தத்தை எட்டிய சில நாள்களுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அக்டோபர் மாதம் ரஷ்யாவில் சந்தித்தார்.
இரு தலைவர்களும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், கருத்துவேறுபாடுகளைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் நிலைப்படுத்த மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் குறைந்தது 20 இந்திய வீரர்களும் நான்கு சீன வீரர்களும் கொல்லப்பட்டதை அடுத்து, அண்மைய ஆண்டுகளில் அணு ஆயுத பலம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன.
தொடர்ந்து எல்லைப் பிரச்சினைகளில் இருநாடுகளுக்குமிடையே உறவு மோசமடைந்தது.