எல்லையில் படைகளைக் குறைத்த சீனா

எல்லையில் படைகளைக் குறைத்த சீனா

2 mins read
0eeaaa25-547b-49fd-8951-09af860cb480
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது படைகளின் பரவலைக் குறைத்துள்ளது.  - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்திய-சீன எல்லைப்பகுதியான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் (LAC) பகுதியில் சீனா தனது படைப்பிரிவுகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் 2025-26ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, வழக்கமான பயிற்சிப் பகுதிகளில் இந்தியா 10 ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளைக் களமிறக்கியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பிரிகேட் படைப்பிரிவில் சுமார் 3,000 வீரர்கள், தேவையான ஆதரவுப் படையினர் இடம்பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது படைகளின் பரவலைக் குறைத்துள்ளது.

காலாட்படை, பீரங்கிப் படை, வான் பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கிய தற்சார்பு கொண்ட ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளை இந்தியா தயார் நிலையில் வைத்ததன் மூலம் எல்லைப் பகுதியில் இந்தியாவின் நிலைப்பாடு மேலும் வலுவடைந்துள்ளது.

அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையே அரசியல், அரசதந்திர, ராணுவ மட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எல்லைப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க உதவியுள்ளன.

மேலும், ஆகஸ்ட் 2025ல் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்ச நிலை மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றதும் இருதரப்பு உறவில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 2025ல் நடைபெற்ற 23வது ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட உதவியது.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’, அதைத் தொடர்ந்து 2025 மே மாதம் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வன்முறைகள் குறைந்து, சூழல் அமைதியாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசீனாஎல்லைராணுவம்பாதுகாப்புஅமைச்சு