புதுடெல்லி: இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளைச் சீனா எளிமையாக்கி இருக்கிறது.
அதனையடுத்து, இந்தியாவிலுள்ள சீனத் தூதரகமும் துணைத் தூதரகங்களும் இவ்வாண்டில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளன.
கட்டாய இணையவழிச் சந்திப்பு விதிமுறை நீக்கம், குறுகிய காலம் தங்குவோருக்கு உயிரளவை (பயோமெட்ரிக்) தரவுச் சேகரிப்பிலிருந்து விதிவிலக்கு, விசா கட்டணம் குறைப்பு உள்ளிட்டவை அண்மைய விதிமாற்றங்களில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் இருநாடுகளுக்கும் இடையிலான பயணங்களை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான இந்தியர்கள் சீனாவிற்குச் சுற்றுப்பயணம் செல்ல வரவேற்கிறார் இந்தியாவிற்கான சீனத் தூதர் ஸு ஃபெய்ஹோங்.
“வசந்த காலத்தில் மலர்கள் மலர்கையில், அதனை நேரடியாகக் கண்டு அனுபவித்து மகிழ, அதிகமான இந்திய நண்பர்களைச் சீனாவிற்கு வரவேற்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியர்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலனை செய்து விசா வழங்கவும் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
வசந்தகாலத் திருவிழாக்கள், இயற்கை அழகுமிக்க இடங்கள் என பண்பாட்டு, பருவம் சார்ந்த சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்தியச் சுற்றுப்பயணிகளிடம் சீனா ஊக்குவித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 பரவல் சார்ந்த கட்டுப்பாடுகளும் அரசதந்திர உறவில் நிலவிய பதற்றமும் அண்மைய ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும் விசா விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வது தாமதமாகி வந்தது. கூடுதல் ஆவணங்கள், தனிமைப்படுத்தல் விதிகள், விசா வழங்குவதில் வரம்பு உள்ளிட்ட கடுமையான பயண விதிமுறைகளை இந்தியப் பயணிகள் எதிர்கொண்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கும் தொழில்சார் பயணிகளுக்கும் சீனா மீண்டும் விசா வழங்கத் தொடங்கியபோதும், பொதுவான பயணங்களுக்குக் கட்டுப்பாடு நீடித்தது.
இந்நிலையில், அண்மைய விசா விதிமுறைகள் தளர்வானது பயணத்தை எளிதாக்கி, இருநாடுகளுக்கு இடையே சுற்றுலா, தொழில்சார் ஈடுபாடுகள், கல்விசார்ந்த பரிமாற்றம் போன்றவற்றை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.