புதுடெல்லி: நேரடி விமானப் பயணச் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு இந்தியாவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேரடியாகச் சந்தித்துப் பேசியபோது அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவரங்களைச் சீன வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) அறிக்கை மூலம் தெரிவித்தது.
ரியோ நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெய்சங்கரை நேரில் சந்தித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தினார்.
கிழக்கு லடாக்கின் பதற்றம் வாய்ந்த பகுதிகளில் இரு நாட்டுப் படை வீரர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சந்திப்பு குறித்து இந்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அண்மைய படைவிலக்கல் குறித்துப் பேசினோம்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், “இருதரப்பு உறவுகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறினோம். உலக நிலவரங்கள் குறித்தும் எங்களது சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் பயணச் சேவையை மீண்டும் தொடங்க இந்தியாவை வாங் யி கேட்டுக்கொண்டார்.