மும்பை: இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை வரும் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு, புத்தாடைகள் வாங்கக் கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் சீன பட்டாசுகள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹவசேவா துறைமுகத்திற்குச் சீனாவிலிருந்து பட்டாசுகள் கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினருடன் விரைந்து சென்ற வருவாய் புலனாய்வு அதிகாரிகள் துறைமுகத்தில் தீவிரச் சோதனை நடத்தினர்.
அதில் அங்குக் கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசுகளின் மதிப்பு 6 கோடியே 32 லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.