ஏஐ மாநாட்டில் சீன இயந்திர நாய்: சர்ச்சையில் இந்தியப் பல்கலைக்கழகம்

ஏஐ மாநாட்டில் சீன இயந்திர நாய்: சர்ச்சையில் இந்தியப் பல்கலைக்கழகம்

படம்: இந்தியா டுடே

18 Feb 2026 - 7:53 pm

2 mins read

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில், சீன இயந்திர நாயைத் (ரோபோடாக்) தங்களுடைய படைப்பு என்று கூறி ஏமாற்றிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தை மாநாட்டில் இருந்து வெளியேறும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் கூடம் அமைத்துள்ளது.

அங்கு, அது காட்சிப்படுத்திய இயந்திர நாய் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதைத் தங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியதாக அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாகச் சொல்லப்பட்டது.

அது சீனாவின் யூனிட்ரீ நிறுவனத்தின் ரோபோ என சமூக வலைதளங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்து, மாநாட்டில் இருந்து வெளியேற கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்

கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கூடத்தில் பார்வையாளர்கள்.
கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கூடத்தில் பார்வையாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பல்கலைக்கழகம் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் நேஹா சிங் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

‘‘மாநாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. கல்கோடியாஸ் நிறுவனம் மிகவும் பொறுப்பான நிறுவனம்.

“இந்த இயந்திர நாயை நாங்கள் உருவாக்கவில்லை. உருவாக்கியதாகவும் நாங்கள் கூறவில்லை. இதுபோன்ற தொழில்நுட்பங்களை வடிவமைத்து உற்பத்தி செய்பவர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை அணுக மாணவர்களுக்கு நாங்கள் வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம்,” என்று அவர் கூறினார்.

பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அனைத்துலக ஏஐ மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 அனைத்துலக நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

சீனாவின் யூனிட்ரீ நிறுவனம் இயந்திர நாய் போன்ற ரோபோக்களை குறைந்த விலையில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.  தொழில்துறை பணிகளுக்கும், பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்கும் இவை அதிகம் பயன்படுகின்றன.
சீனாவின் யூனிட்ரீ நிறுவனம் இயந்திர நாய் போன்ற ரோபோக்களை குறைந்த விலையில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. தொழில்துறை பணிகளுக்கும், பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்கும் இவை அதிகம் பயன்படுகின்றன. - படம்: நியூஸ் மினிட்
குறிப்புச் சொற்கள்
இந்தியாஏஐசெயற்கை நுண்ணறிவுஉச்சநிலை மாநாடுபுதுடெல்லிசர்ச்சைபல்கலைக்கழகம்