எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்

எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

27 Oct 2026 - 5:53 pm

1 mins read

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீன வீரர்கள் ஊடுருவி இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் பொய் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வலம்வரும் காணொளி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி காணொளி என்றும் ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளில் சீன வீரர்கள் ஏறக்குறைய 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊடுருவி இருப்பதாகவும் இந்திய வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கும் வகையில் சில காணொளிகள் வெளியாகிச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் கிரிஷ் காளியா அளித்த பேட்டியை, வன்போலிக் காணொளி தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்துத் தவறான தகவல்களுடன் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்திய எல்லைக்குள் சீன வாகனங்கள் நுழைந்ததாகக் கூறப்படும் காணொளிகள் உண்மையல்ல என்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் காணப்படுபவை, சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் வழியாகச் சென்ற சாதாரண சரக்கு வாகனங்கள் என்றும் இந்திய ராணுவம் தெளிவுபடுத்தி உள்ளது.

போலித் தகவல்கள், காணொளிகளைப் பரப்பிய 12 சமூக ஊடகக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவம் எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்