சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட பழைமையான சிலைகளை மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டுவர, காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தச் சிலைகளில், மூன்று சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவற்றைத் தமிழகத்திடம் திருப்பி ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பி ஒப்படைக்க இருக்கும் சிலைகளில் இரண்டு திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்தவை.
திரிசூல மங்கள காளி சிலை மற்றும் நந்தி சிலை அவை.
மூன்றாவது சிலை, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மானம்பாடி கிராமம் நாகநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த சுப்பிரமணியர் சுவாமி சிலை ஆகும்.
இந்தக் கோயில் கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.
சோழர் காலச் சிலைகள் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்தன.
நேர்த்தியான மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் அவை.
பிரதமர் மோடியின் முயற்சியால் அவை தற்போது தாயகம் திரும்புவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

