ஷிம்லா: முதலமைச்சர் சுவைப்பதற்காக வைத்திருந்த சமோசாக்களையும் கேக்குகளையும் அவருடைய பாதுகாவலர்களுக்கு வழங்கியதை அடுத்து, அதுகுறித்து விசாரிக்கும்படி குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தை ‘அரசாங்கத்திற்கு எதிரானது’ என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அன்றைய நாளில் ஷிம்லாவில் உள்ள சிஐடி தலைமையகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அங்குச் சென்றார்.
அப்போது, அவருக்குச் சிற்றுண்டி வழங்குவதற்கென ஹோட்டல் ரேடிசன் புளூவிலிருந்து குறைந்தது மூன்று பெட்டிகளில் சமோசா தருவிக்கப்பட்டது.
அவை முதல்வரின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சிஐடி விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலைக் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
சிஐடி அமைப்பே அதுகுறித்து தன்னிச்சையாக விசாரித்து வருவதாக அது விளக்கமளித்தது.
“இதன் தொடர்பில் அரசாங்கம் செய்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்கம் எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. சிஐடி அமைப்பு, அதன் மட்டத்திலேயே விசாரித்து வருகிறது. அந்தச் சிற்றுண்டிகள் முதல்வரின் பணியாளர்களுக்குத்தானே வழங்கப்பட்டன?” என்று முதல்வரின் தலைமை ஊடக ஆலோசகர் நரேஷ் சௌகான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தைத் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்குகிறது என்றும் அவர் சாடினார்.
“பாஜகவிற்கு எந்த விவகாரமும் அகப்படவில்லை என்பதால், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசுமீது இப்படி பொய்யான பரப்புரையைச் செய்து வருகிறது,” என்றார் அவர்.
முன்னதாக, இமாச்சலப் பிரதேச அரசுக்கு மாநில வளர்ச்சியில் அக்கறையில்லை என்றும் முதல்வரின் சமோசாமீதுதான் அக்கறையுள்ளதுபோல் தெரிகிறது என்றும் பாஜக தலைமைப் பேச்சாளர் ரந்தீர் சர்மா கூறியிருந்தார்.
இதனிடையே, சமோசா விவகாரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று இமாச்சலப் பிரதேச சிஐடி தலைமை இயக்குநர் சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக அதிகாரிகள் பலர் கூடி தேநீர் அருந்தியபோது, அப்போது ‘வாங்கப்பட்ட சிற்றுண்டிகள் எங்கே போயின’ என அவர்கள் வியப்படைந்ததாகத் திரு ஓஜா விளக்கினார்.