தெலுங்கானாவில் மக்களுக்குத் தோதான புகார் பதிவுத் தளம்

2 mins read
9e37f659-bd6f-4d5e-b49f-24b0618522c5
ஜனவரி 27ஆம் தேதி இந்தத் தளம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: சாக்‌ஷி போஸ்ட்
multi-img1 of 2

ஹைதராபாத்: குடிமக்களுக்குத் தோதான, குற்றங்களைப் பற்றிய புகார்களைப் பதிவுசெய்வதற்கான தளத்தை தெலுங்கானா மாநிலம் அறிமுகப்படுத்துகிறது.

காவல்துறைச் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெற வகைசெய்யும் நோக்கில் உருவாக்கப்படும் இத்தளத்தில் ‘போக்சோ’ எனப்படும் பெண்கள், சிறார் பாலியல் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழான புகார்களையும் பதிவுசெய்யலாம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டினால் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று புகாரளிக்கத் தேவையிருக்காது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இதுபோன்ற ஒரு தளம் முதன்முறையாக வெளியிடப்படுவதாக நம்பப்படுகிறது. அடுத்த வாரம் இந்தப் புகாரளிப்புத் தளம் அறிமுகப்படுத்தப்படும்.

இத்தளத்தின்வழி சில குற்றங்களுக்கான புகார்களைக் குடிமக்கள் தங்கள் வீடு அல்லது விரும்பும் இடத்திலிருந்து பதிவுசெய்யலாம் என்று இந்தியாவின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் கூடுதல் டிஜிபி (Additional DGP) சாரு சின்ஹா தெரிவித்தார்.

“இதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் நமது அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் நிறைவடையும். ஜனவரி 27ஆம் தேதி இத்தளம் அறிமுகமாகும்,” என்று சின்ஹா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தங்கள் பாதுகாப்புக்காகவும் மரியாதையுடன் செயல்படவும் முதல் குற்ற அறிக்கைக்குப் பதிவுசெய்வது முக்கியம்.

என்றாலும், பல விவகாரங்களில் போக்சோ சட்டம் போன்றவற்றின்கீழ் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறார் புகாரளிக்க உடல் ரீதியாகவோ மனத்தளவிலோ காவல் நிலையத்துக்கு நேரடியாகப் போகும் நிலையில் இல்லாமல் இருக்கலாம்.

அத்தகையோருக்கு இத்தளம் உதவிக்கரம் நீட்டும் என்று திருவாட்டி சின்ஹா குறிப்பிட்டார்.

புதிய குற்றவியல் புகார் தளம் குறித்த செயல்பாடுகள், வழிமுறைகள் ஆகியவற்றை தெலுங்கானா முழுவதும் செயல்படுத்த அவற்றை விவரிக்கும் ஆவணங்கள் தயார்செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட எல்லா அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திருவாட்டி சின்ஹா கூறினார்.

குறிப்புச் சொற்கள்