புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் தொடர்பாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை பதிவுகளில் ஆட்சேபணைகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், ஞானேஷ் குமார் விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி களமிறங்கியுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே மற்றும் சில நிர்வாகிகள் தேர்தல் ஆணையம் தொடர்பாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். எஸ்.ஐ.ஆர் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
“48 மணி நேரத்துக்குள் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம். ஞானேஷ்குமார் பதவி விலக மறுத்தால் டெல்லியில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்,” என்று அவர்கள் கூறினர்.
மேலும், “எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போதைய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை நிறுத்திவைத்து, 2025 வாக்காளர் பட்டியலுக்குத் திரும்ப வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் கைப்பற்றி நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்க வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
“அதேபோல், இந்தியத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலான ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்,” என அவர் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமைக்குள் (செப்டம்பர் 25) ஞானேஷ் குமார் பதவி விலகல் செய்யவில்லை என்றால் அக்டோபர் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அபிஜீத் திப்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
