கொச்சி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும் சனிக்கிழமை (நவம்பர் 7)கேரள மாநிலம் கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகக் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தேசிய செயலாளர் ஆஃப்ரீன் நவாஸ், அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைத் டெல்லி காவல்துறை கைது செய்தது.
தலைநகரில் போராட்டங்களுக்கான கெடுபிடிகளும் தடைகளும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனநாயக உரிமைகளுக்கான குரலை தேசிய அளவில் எதிரொலிக்கும் வகையில் தங்கள் போராட்டத்தை டெல்லிக்கு வெளியே கொண்டு செல்ல அக்கட்சி தீர்மானித்துள்ளது.
“ஜனநாயகத்தைக் காப்போம், எஸ்ஐஆர்-ஐ (SIR) ரத்து செய்வோம்” என்ற கோரிக்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கொச்சிப் போராட்டம், டெல்லிக்கு வெளியே சிஜேபி நடத்தும் முதல் மிகப்பெரிய இயக்கமாகப் பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கொச்சியில் கூடி வருகின்றனர். டெல்லியில் துவங்கப்பட்ட இந்த எதிர்ப்பு இயக்கம் தற்போது தென்னிந்தியாவை எட்டியுள்ளதால், கேரள அரசியல் களம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.
