இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோவில் உள்ள ஜமா மசூதி அருகே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாம் முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடும் பேரணியின்போது மோதல்கள் வெடித்தன.
மோவில் உள்ள ஜமா மசூதி பகுதி வழியாகப் பேரணி சென்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த சிலர் அவர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர்.
இதனால், இரு குழுவினருக்கும் இடையே மோதல் மூண்டது. பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அத்துடன், மேலும் இரண்டு வாகனங்களுக்கும் இரண்டு கடைகளுக்கும் சந்தேகப் பேர்வழிகள் தீ வைத்ததாக இந்தியா டுடே ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
“வெற்றிப் பேரணி ஜமா மசூதி பகுதியை நெருங்கியபோது, ஒரு பெரிய குழுவினர் பேரணியில் செல்வவோர்மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.
வன்முறையைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தூர் கிராமப்புறம், நகர்ப்புறத்தில் இருந்து ஒரு கனரக காவல் படை அப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
“இங்கே இரு தரப்பினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. மேலும் சில வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.
“இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு பட்டாசு வெடித்ததால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இப்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது.
“எந்த வகையான போலிச் செய்திகளையும் நான் நம்பவில்லை என்பதை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“போதுமான படை பலம் இங்கே உள்ளது. நாங்கள் அந்தப் பகுதியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சம்பவம் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். விசாரணை நடந்து வருகிறது,” என்று இந்தூர் கிராமப்புற காவல் ஆணையர் ஹிதிகா வாசல், மோவ் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
இந்தூர் ஆட்சியர் ஆஷிஷ் சிங்கிடம் கேட்டபோது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அப்பகுதியில் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“சம்பவம் எப்படி நடந்தது என்பது பின்னர் தெரியவரும். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.