தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: ஐந்து சிறார்கள் உட்பட ஏழு பேர் பலி

2 mins read
dbb223f2-4b90-4599-a10c-e816250168c0
சிசோட்டி கிராமத்தில் மட்டும் 82 பேரைக் காணவில்லை. - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

கடந்த சில நாள்களில் அங்கு நிகழ்ந்துள்ள இரண்டாவது மேக வெடிப்புச் சம்பவம் இதுவாகும். அங்குள்ள கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14ஆம் தேதி திடீர் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள மலைப்பாதை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ள நீருடன் மண்சரிவும் சேர்ந்து கொண்டதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வெள்ளப் பெருக்கில் கடைகள், வீடுகள், தங்குவிடுதிகளுடன் ஏராளமான வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்னவானது எனத் தெரியாமல் குடும்பத்தார் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். சிசோட்டி கிராமத்தில் மட்டும் 82 பேரைக் காணவில்லை.

ஜம்மு, உதம்பூர், சம்பா மாவட்டங்களிலும் பலர் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பலர் மாயமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு, நிவாரணப் பணிகளைத் தொடங்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களில், ஐந்து பேர் சிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. ஐந்து பேரும் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், ஜுதானா ஜோத் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மொத்தமாக மண்ணில் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது.

“முதலில் நால்வர் மட்டுமே இறந்துவிட்டதாகக் கருதினோம். ஆனால், தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்துவிட்டது,” என்று மாவட்ட காவல்துறை தலைவர் ஷோபித் சக்சேனா தெரிவித்தார்.

காயமடைந்த ஆறு பேர் வான்வழி பதான்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 3.30 மணியில் இருந்து 4 மணிக்குள் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழை காரணமாக, சஹார் காட், உஜ் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் ரயில், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில தொழிற் பகுதிகள், ஜங்லோட் காவல் நிலையம், பள்ளி வளாகங்களில் மழைநீர் புகுந்துவிட்டதாக இந்துஸ்தான் ஊடகச் செய்தி தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் இறந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் இணைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்