புதுடெல்லி: காவல்துறையின் தடையை மீறி கரப்பான்பூச்சி மக்கள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் டெல்லியில் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அவர்கள் தடைகளை மீறி திங்கட்கிழமை (ஜூலை 20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கியது. இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருப்பதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
எனினும், பேரணிக்குக் காவல்துறை அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆயிரக்கணக்கான இளையர்களும் மாணவர்களும் டெல்லி ஜன்தர் மன்தர் பகுதியில் குவிந்தனர். இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி மாநகரம் முழுவதும் பாதுகாப்புத் துறையினர் குவிக்கப்பட்டனர். குறிப்பாக ஜன்தர் மன்தர் பகுதியில் துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு அரண்கள், தடுப்புகளை அமைத்தனர்.
இந்திய நாடாளுமன்றம் உள்ளிட்ட டெல்லியின் முக்கியப் பகுதிகள் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜன்தர் மன்தர் பகுதியில் கூடிய போராட்டக்காரர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடி ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். போராட்ட அறிவிப்பை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே ஜன்தர் மன்தர் பகுதியில் ஏராளமானோர் குவியத்தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து, ஏற்கெனவே அங்கு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து, இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டத்தைத் தொடங்கியது. அது தீவிரமடைந்து, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனைமனயில் இருந்தபடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வாங்சுக்.
அதில், நடந்த முறைகேடுகளுக்கு இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை தாம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபின் அவர்களது கோரிக்கைகளை நாடாளுமன்ற அவையில் எழுப்ப உறுதியளிக்கப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தவணையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வேளையில், அவர் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது.
குறிப்பாக. இந்தியாவில் அதிகரித்துவரும் வேலையின்மை, கல்வித்துறை மீதான அதிருப்தி ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இந்தப் போராட்டம் கருதப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

