புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளையர் ஒருவரின் குடலில் இருந்து உயிருள்ள மூன்று செ.மீ. கரப்பான்பூச்சி அகற்றப்பட்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த 23 வயது இளையர், கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கடுமையான வயிற்றுவலியாலும் செரிமானப் பிரச்சினையாலும் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்று மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் சுபம் வத்ஸ்யா கூறினார்.
இதையடுத்து, வசந்த் கஞ்ச் என்னும் பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் (Fortis Hospital) அனுமதிக்கப்பட்டு அவருக்கு ‘எண்டோஸ்கோபி’ பரிசோதனை செய்யப்பட்டது.
இளையரின் சிறுகுடலில் உயிருள்ள கரப்பான்பூச்சி ஒன்று நெளிந்தது அந்தப் பரிசோதனையின்போது தெரியவந்தது.
உடனே எண்டோஸ்கோபிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுகுடலில் இருந்து அந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் 10 நிமிடங்களில் வெற்றிகரமாக அகற்றினர்.
அகற்றப்பட்ட அந்தக் கரப்பான்பூச்சி மூன்று செ.மீ. அளவில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அந்தப் பூச்சி அகற்றப்படாமல் இருந்திருந்தால் இளையரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
நோயாளி சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது அது அவரது வாயில் நுழைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.