புதுடெல்லி: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பை சென்ற ‘ஏர் இந்தியா’ விமானத்தில் கரப்பான்பூச்சிகள் இருந்ததால் பயணிகள் வேறு இருக்கைகளில் அமரவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ‘ஏஐ180’ விமானம், கோல்கத்தா வழியாக மும்பைக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த விமானத்தில் சில சிறிய கரப்பான்பூச்சிகளைக் கண்ட பயணிகள் இருவர் அதுகுறித்துப் புகாரளித்தனர்.
பின்னர் அவர்கள் வேறு இருக்கைகளில் அமரவைக்கப்பட்டனர் என்று ‘ஏர் இந்தியா’ கூறியது.
சில நேரங்களில் பூச்சிகள் விமானத்திற்குள் நுழைந்துவிடுவதுண்டு என்று அது குறிப்பிட்டது.
விமானம் கோல்கத்தாவில் தரையிறங்கியதும் முழுவீச்சில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பின்னர் அந்த விமானம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தவற்றை ஒப்புக்கொண்ட ‘ஏர் இந்தியா’, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இனி இத்தகைய சம்பவங்கள் நேராமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது கூறியது.