குஜராத்: குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததற்கு, அதன் ‘பெடெஸ்டல்’, ‘ஆர்டிகுலேஷன்’ இணைப்புப் பகுதிகள் நொறுங்கியதே முக்கியக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள மஹிசாகர் ஆற்றுப் பாலம் ஜூலை 9 ஆம் தேதி காலை 7:30 மணியளவில் இடிந்து விழுந்தது.
சம்பவத்தன்று ஒன்பது பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்தப் பலி எண்ணிக்கை இப்போது 20ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி குஜராத் அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இப்போது முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், “பாலத்தின் இணைப்புப் பகுதிகளில் ஏற்பட்ட பலவீனம், அரிப்புத் தன்மை, பாலத்தின் கட்டுமானப் பணியின் நிலைத்தன்மையைப் பாதித்ததாக அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது. பாலங்களின் பராமரிப்பு, பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
“30 நாள்களுக்குள் இந்த விபத்து குறித்த விரிவான அறிக்கையை விசாரணைக் குழு சமர்ப்பிக்கும். அது குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
“தவறுகள் நடந்துள்ள இடங்களில் எல்லாம் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
“மாநிலத்தின் சாலைகள், பாலங்களின் கட்டமைப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக இம்மாநிலத்தில் உள்ள ஏறக்குறைய 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பாலம் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக நான்கு பொறியாளர்களை இடைநீக்கம் செய்து முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.
விபத்தின்போது, பாலத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. மேலும், ஆறு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்தப் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஆற்றில் மூழ்கி மாயமானவர்களைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது என்று வதோதரா ஆட்சியர் அனில் தமேலியா கூறியுள்ளார்.