ஹைதராபாத்: இணைபிரியாத் தோழிகளாக வலம் வந்த இரு இளம்பெண்களை மரணமும் பிரிக்கவில்லை.
தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டம் கார்லாவைச் சேர்ந்தவர்கள் கடியால பாவனா, 24, புல்லகண்டம் மேகனா ராணி, 24. பி.டெக் பட்டப்படிப்பு படித்த இருவரும் ஈராண்டுக்கு முன்னர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றனர்.
படிப்பு முடிவடையும் தருவாயில் அவ்விருவரும் அமெரிக்காவிலேயே வேலை தேடிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க அவ்விருவரும் நண்பர்கள் சிலருடன் கலிஃபோர்னியாவுக்கு சுற்றுலா சென்றனர்.
அலபாமா மலைப்பகுதி சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது அவர்களின் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் பாவனா, மேகனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கலிஃபோர்னிய காவல்துறையினர், சம்பவ இடம் சென்று உடல்களை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கி உள்ளனர். விபத்து குறித்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருவரின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கலிஃபோர்னியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் விபத்துக்கான சரியான காரணத்தை விசாரித்து வருகின்றனர். அதேநேரம், அமெரிக்காவில் உள்ள தெலுங்கு புலம்பெயர்ந்த சமூகத்தினரும் இரு பெண்களின் சடலத்தை தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

