புதுடெல்லி: தமிழகத்திற்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொளி வாயிலாகப் பங்கேற்றனர்.
அப்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த 4 அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், தமிழக அரசின் சார்பில், “கோடை காலம் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மே மாதத்தில் தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும்,” என வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்றுகொண்ட காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், தமிழகத்துக்கான காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.

