வதந்தியால் பல்கலையில் களேபரம்: ராணுவ விமானம் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்

வதந்தியால் பல்கலையில் களேபரம்: ராணுவ விமானம் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்

படம்: பிடிஐ

28 Sep 2026 - 6:19 pm

2 mins read

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள பிரபல ‘லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக’ வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை 1 மணியளவில் விடுதி அருகே திரண்ட மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் வளாகத்தில் இருந்த கட்டடக் கண்ணாடிகள், பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘மிக்-23’ போர் விமானம், ராணுவ டேங்க் ஆகியவற்றின் மீது மாணவர்கள் சிலர் ஏறி நின்று முழக்கமிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

மேலும், தேசிய நெடுஞ்சாலையை மறித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பஞ்சாப் காவல்துறை சிறப்புப் படை, உயர் அதிகாரிகள், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

மாணவர்களின் புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜலந்தர் சரக டிஐஜி நவீன் சிங்லா தெரிவித்தார்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகள், தொலைபேசி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை நடந்ததாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் சமூகவிரோதிகள் சிலர் சமூக ஊடகங்களில் தவறான வதந்திகளைப் பரப்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பல்கலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பஞ்சாப்மாணவர்கள்பாலியல் வன்கொடுமைவதந்திபோராட்டம்