மேற்கு வங்கத்தில் பாஜக, காங்கிரஸ் இடையேதான் போட்டி: ராகுல்

மேற்கு வங்கத்தில் பாஜக, காங்கிரஸ் இடையேதான் போட்டி: ராகுல்

2 mins read
23f5fc77-88b2-48dd-a814-42e926572fd8
பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும் என்றார் ராகுல் காந்தி. - கோப்புப் படம்: தி ஸ்டேட்ஸ்மேன்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்துக்குள் பாஜக நுழைவதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

பாஜகவை எதிர்த்துப் போரிடுவதில் முதல்வர் மம்தாவுக்கு ஆர்வமில்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மம்தாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டார் என்றார்.

“முதல்வர் மம்தா மக்கள் நலனில் அக்கறை காட்டியிருந்தால் பாஜக இங்கே காலூன்றி இருக்க முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இடதுசாரி ஆட்சிக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கம் தொழில்துறையின் மையமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இடதுசாரிகளும் தற்போது அந்த வளர்ச்சியை சீரழித்துவிட்டதாகச் சாடினார்.

2021ல் மம்தா வாக்குறுதி அளித்த ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் என்னவானது என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் திரிணாமூல் காங்கிரசில் உறவினர்கள் இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது என்று தெரிவித்த அவர், தன் மீது பல்வேறு வழக்குகளைத் தொடுத்த பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி மீது ஏன் ஒரு வழக்குகூட தொடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

“என் மீது 36 வழக்குகள் உள்ளன. அமலாக்கத் துறை என்னிடம் 55 மணிநேரம் விசாரணை நடத்தியது. மம்தா பானர்ஜியை எத்தனை மணிநேரம் விசாரித்தனர்?

“பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தும், மம்தா மீது ஏன் வழக்குகள் போடப்படவில்லை. ஏனென்றால், அவர் பாஜகவை நேரடியாக எதிர்த்துப் போரிடுவதில்லை,” என்றார் ராகுல் காந்தி.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ஆம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து அங்கு தலைவர்களின் இறுதிக்கட்டப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்