பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்படாது: உச்ச நீதிமன்றம்

பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்படாது: உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

01 Oct 2026 - 3:24 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்படாது என்றும் அதே நேரத்தில், 24 மணி நேரமும் அவற்றை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மக்களின் சமய உணர்வுகளையும் காற்று மாசுபாட்டால் சிறார், முதியவர்கள், உடல்நலப் பிரச்சினை உடையோருக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அர்ஜுன் கோபால் என்பவர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் என இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் என்பது தசரா கொண்டாட்டத்திலிருந்தே தொடங்குகிறது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு ஒரு கால வரம்பை நிர்ணயிக்க முடியாது,” என்று வாதிட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நீதிமன்றம் நிர்ணயித்ததைச் சுட்டிக்காட்டினர்.

அதன்பிறகு முன்னிலையான இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டீ, அறிவியல், தொழிலக ஆய்வு மன்றம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, சரவெடிகளையும் பசுமைப் பட்டாசுகளையும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி சுந்தரேஷ், “பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்க மாட்டோம். அதேவேளையில், நாள் முழுவதும் பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க முடியாது. முழுத் தடை என்பது உணர்வுபூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும்.

“அதேவேளையில், நாள் முழுவதும் வெடித்தால் முதியோர், நோயாளிகள், சிறார்க்குப் பாதிப்பு உண்டாகும். குறிப்பிட்ட நேரத்தையும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளையும் நிர்ணயிப்பதே சரியான தீர்வாக இருக்கும்,” என்று விளக்கினார்.

இதையடுத்து, சரவெடிகளின் அளவு, வெடிகளின் எண்ணிக்கை, வெடிக்கும் நேர இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளுடன் புதிய தலைமுறைச் சரவெடிகளைத் தயாரிக்க அனுமதிக்கலாம் என்ற இந்திய அரசின் பரிந்துரையை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பேரியம் கலக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை பசுமைப் பட்டாசுகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து டெல்லி, போபால், கோல்கத்தா, சென்னை ஆகிய நகர்களில் திறந்தவெளியில் பரிசோதிக்க இந்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அதை ஏற்று ஆய்வின் முடிவுகளைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்