தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹேமா குழுவின் முழுமையான அறிக்கை; 20 பேரிடம் தீவிர விசாரணை

2 mins read
e742dddb-22bf-4baf-baf1-4b67d7dafa4c
3,896 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.  - படம்: ஊடகம்

கொச்சி: மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு 2017ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது.

அதன் தொடர்பான அறிக்கையை கேரள அரசிடம் ஹேமா குழு 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தான் அந்த அறிக்கையின் சில விவரங்கள் வெளியானது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராகப் பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி மலையாளத் திரையுலகம் ஆட்டங்கண்டது.

நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமித்தது. பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஹேமா கமிட்டியின் முழுமையான விசாரணை அறிக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மொத்தம் 3,896 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு ஈடுபட்டது.

அதன்படி ஹேமா கமிட்டியிடம் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் 20 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படுகிறது.

அவர்களை 10 நாட்களுக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் என்பதால், அவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த உள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்