சக்ரதார்பூர்: தமிழகத்தில் உள்ள நூற்பாலை ஒன்றில் பணயக் கைதிகளாகச் சிறைவைத்துச் சித்திரவதை செய்ததாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்துச் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியத்துடன் உணவும் கொடுப்பதாக உறுதியளித்து ஒடிசாவைச் சேர்ந்த இடைத்தரகர்கள் வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்வதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால் அங்கு அவர்கள் கொத்தடிமைகளைப் போலச் சிறை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “எங்கள் விருப்பத்திற்கு மாறாக நூற்பாலை வளாகத்திற்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டோம்.
“வெளியே செல்ல முயன்றபோது எங்களை அடித்துத் தாக்கி தடுத்தனர்.
“முறையான ஊதியம் வழங்கப்படவில்லை; தரம் குறைந்த உணவே வழங்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அடித்துத் தாக்கப்படுவோம்,” எனத் தங்களது துயரத்தை விவரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நூற்பாலையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் அங்கிருந்து எப்படியோ தப்பியோடிய ஊழியர்கள், தங்களிடம் இருந்த சொற்பப் பணத்தைக் கொண்டு எர்ணாகுளம் - டாடா விரைவு ரயிலில் ஏறியுள்ளனர்.
சரியான பயணச்சீட்டு எடுக்கக்கூட பணம் இல்லாத நிலையில், ரயிலில் அபராதம் செலுத்தியும் ரயில்வே ஊழியர்களின் கெடுபிடிகளுக்கு இடையிலும் பசியுடனும் சோர்வுடனும் சனிக்கிழமை சக்ரதார்பூர் வந்தடைந்தனர்.
தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
“நாங்கள் உயிருக்குப் பயந்து சொந்த முயற்சியிலேயே மீண்டு வந்துள்ளோம். இன்னும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த நூற்பாலைக்குள் சிக்கியுள்ளனர்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவு
சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாய்பாசா துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர்களை அழைத்துச் சென்ற இடைத்தரகர்கள், நூற்பாலை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

