புதுடெல்லி: பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே பாகிஸ்தானுடனான தற்போதைய மோதல் முடிவுக்கு வரும் என இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜெ.பி.சிங் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் பயங்கரவாதிகள் எங்கு இருந்தாலும் அழிக்கப்படுவர் என்றும் இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் சூளுரைத்துள்ளார்.
“நாங்கள் சிந்து நதிநீர் மூலம் தண்ணீரைப் பாய அனுமதித்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் பாய அனுமதிக்க மாட்டோம். இதைதான் பிரதமர் மோடி, தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.
“அமெரிக்காவால் ராணாவை ஒப்படைக்க முடியும் என்றால், பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி ஆகியோரை ஒப்படைக்க முடியாது,” என்று ஜெ.பி.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதில், அதிபர் டிரம்புக்கு பங்கு இல்லை என இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து திங்கட்கிழமை (மே 19) நாடாளுமன்றக் குழு முன்பு முன்னிலையாகி, விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் வழக்கமான ஆயுதங்களைக் கொண்ட மோதலாகவே இருந்தது என்றார்.
பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களை இந்திய ராணுவம் சேதப்படுத்தியது என்றும் அதன் காரணமாகத்தான் பாகிஸ்தான், சீனாவின் ஆயுதங்களைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் விக்ரம் மிஸ்ரி விவரித்தார்.
“பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்கா அல்லது அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் பங்களிப்பு ஏதும் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநரை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் தொடர்புகொண்டு சண்டை நிறுத்த கோரிக்கையை முன்வைத்தார். எனவே இதில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை,” என்றார் விக்ரம் மிஸ்ரி.