புதுடெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பகுதி மின்கடத்தி உற்பத்தித் துறையை முடக்குவதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து சதித்திட்டங்கள் தீட்டப்படலாம் என்று இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார்.
அத்தகைய சதித்திட்டங்களை எதிர்கொள்ளத் தொழில்துறை தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ‘ஐஃபோன்’ உற்பத்தி தொடங்கிய புதிதில், சில அமைப்புகள் மூலமாக உணவு நச்சுத்தன்மை, பொய்யான செய்திகள், மின்சார இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலைக்கு வருவதை விரும்பாத சில சக்திகளே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு சில்லு உற்பத்தியை இந்தியா தீவிரமாக விரிவாக்கம் செய்துவரும் நிலையில், உலகளாவிய போட்டியால் இந்தியச் சந்தையைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள், தவறான தகவல் பரப்புரைகள், நேரடிச் சீர்குலைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என திரு அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.
தற்போது செயற்கை நுண்ணறிவுப் புரட்சி உலகளாவிய அளவில் தீவிரமடைந்து வரும் சூழலில், பகுதி மின்கடத்தி சில்லுகளுக்கான தேவையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதனால், அமெரிக்கா, தைவான், தென் கொரியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இத்துறையில் இந்தியா தடம்பதிப்பது பல உலகளாவிய போட்டியாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையில் இந்தியா தற்சார்பை எட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்றும் இத்துறையில் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் தற்சார்பை எட்டவும் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
