புதுடெல்லி: இந்தியா, சீனா இடையேயான அண்மையப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான, தொலைநோக்குப் பார்வை கொண்டவை என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ அமைப்பின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசினார். மேலும், இருநாடுகளின் உயரதிகாரிகளும் சந்தித்துப் பேசினர்.
பிரிக்ஸ் அமைப்புக்குத் தற்போது தலைமையேற்றுள்ள இந்தியாவின் ஏற்பாட்டில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 22, 23) பிரிக்ஸ் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது திரு தோவலும் அமைச்சர் வாங் யீயும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
மேலும், அந்தப் பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுகள் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா, சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. எனினும், 2024 முதல் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன.
இருதரப்புகளின் அடிப்படை நலன்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் முக்கியமான பிரச்சினைகளை முறையாகக் கையாள வேண்டும் என்றும் திரு வாங் கூறியதாகச் சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வர்த்தகம், நிதி, சட்ட அமலாக்கம், ஊடகத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திரு வாங், இதற்கான பன்முகச் செயல்முறையை பிரிக்ஸ் அமைப்பு ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கியுள்ளன.
அண்மையில் மேலும் சில நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

