பாட்னா: பீகார் மாநிலத்தில் ஐந்து நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்டன.
கங்கை உட்பட முக்கியமான நதிகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டிப்பாய்வதால், பாட்னா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஏறக்குறைய 40.21 லட்சம் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேப்பாள நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் பெருமழையும் பீகாரின் உள்மாவட்டங்களில் நீடிக்கும் கனமழையுமே இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்குக் காரணமாகும்.
கங்கை, கோஷி கண்டக், புத்தி கண்டக், புன்புன், பாக்மதி, காக்ரா உள்ளிட்ட அனைத்து முக்கியமான ஆறுகளும் கரபுரண்டு ஓடுகின்றன. குறிப்பாக, பாகல்பூரின் சுல்தான்கஞ்ச் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் 36.75 மீட்டராக உயர்ந்துள்ளது.
பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பாகல்பூர், பெகுசரை, பக்சர், பூர்னியா உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களுக்கான சாலைத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் 723 சமூகச் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி உபசரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, வானிலை ஆய்வு மையம் மேலும் இரண்டு நாள்களுக்குக் கனமழை நீடிக்கும் என எச்சரித்துள்ளது.

