புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், போராட்டக் காட்சிகள், தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்ற படங்களை அகற்றுமாறு நிர்வாகம் நெருக்கடி அளித்ததைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா தம்பதியரின் மகனான ரெஹான் வதேரா, புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர். அவர் புதுடெல்லியில் இளையர், மாணவர்கள் நடத்திய போராட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கண்காட்சி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் அரசியல் சார்புடைய 74 படங்களை நீக்குமாறு பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் வற்புறுத்தியது.
தவறினால் கண்காட்சி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டதால் அவை நீக்கப்பட்டன. இருப்பினும், இந்திய மூவர்ணக் கொடி இடம்பெற்றிருந்த படத்தை அகற்ற ரெஹான் வதேரா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தேசியக் கொடி இருக்கும் படத்தை அகற்றுவது கொடியை அவமதிப்பதாகும் என்று தெரிவித்த அவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “இளைஞர்களின் போராட்டக் காட்சிகளையும் தேசியக் கொடியையும் அகற்றுமாறு கூறியுள்ளனர். தேவைப்பட்டால் தணிக்கை செய்யப்பட்ட படங்களை வேறு இடத்தில் காட்சிப்படுத்துவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
