புதுடெல்லி: நச்சு கலந்த இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கும் தேசிய அளவில் மருந்துப் பாதுகாப்பு குறித்த மறுஆய்விற்கும் உத்தரவிடக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்தால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் குறைந்தது 14 குழந்தைகள் மாண்டுபோயினர்.
இந்நிலையில், அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேசிய அளவிலான விசாரணை ஆணையம் அல்லது வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் விசாரணை உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி விஷால் திவாரி எனும் வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், அவ்விவகாரம் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் மாநில அளவிலான விசாரணைகளையும் சிபிஐவசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறுவனங்கள் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவது குறித்து விசாரணை நடத்த தேசிய அளவிலான ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சந்தேகப்படும்படியான அனைத்து மருந்துகளையும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் நச்சியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் திரு திவாரி கோரியிருக்கிறார்.
இதனிடையே, பஞ்சாப், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்துக்குத் தடை விதித்துள்ளன.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மருந்தையும் கொடுக்கக்கூடாது என்று கேரளச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள் தொடர்பில் ஆய்வுசெய்து, உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும் நோக்கில் மூவர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநிலச் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு, உத்தராகண்ட், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் ‘கோல்டிரிஃப்’ மருந்துக்கு எதிராக ஆலோசனைக் குறிப்புகளை வெளியிட்டுள்ளன.
இவ்வேளையில், மேலும் இரு இருமல் மருந்துகளில் ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப் பிரதேச உணவு, மருந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.