நாக்பூர்: தங்களுடைய தனது திருமணச் செலவைக் குறைத்துக் கொண்டு, அதன் மூலம் சேமித்த தொகையை வைத்து தங்கள் கிராமத்துக்கு சாலை அமைத்துக் கொடுத்த தம்பதியர்க்குப் பாராட்டுகள் குவிகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் எகுடே. விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள 29 வயது இளையரான இவர் விவசாயத்தில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.
இவரது கிராமத்துக்குச் சென்று திரும்ப சரியான சாலை வசதிகள் இல்லை. இதனால் அங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்தும் சில விவசாயிகளும் இணைந்து ரூ.13,000 செலவில் ஒரு மண் சாலை அமைத்தனர். இதற்குத் தேவைப்பட்ட நிலத்தை ஸ்ரீகாந்த் கொடுத்தார். எனினும், மண் சாலை மட்டுமே போதுமானதாக இல்லை.
இந்நிலையில், ஸ்ரீகாந்துக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது கிராமத்துக்கு சாலை அமைக்க தேவைப்பட்ட தொகையைத் திரட்டிவிட்டார் ஸ்ரீகாந்த்.
“திருமணச் செலவை முடிந்தவரை குறைத்தோம். திருமண மண்டபம் இல்லாமல் திறந்த வெளியில் திருமணத்தை நடத்தினோம். இதன் மூலம் ரூ.50,000 மிச்சமானது. அதை வைத்து புதிய தரமான சாலையை அமைக்க முடிந்தது,” என்கிறார் ஸ்ரீகாந்த்.
மேலும், திருமணத்தன்று யாரும் பரிசுப் பொருள்களைத் தரவேண்டாம் என இத்தம்பதியர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டனர்.
அதற்குப் பதில் நல்ல புத்தகங்களும் 90 வகையான மரக்கன்றுகளும் திருமணப் பரிசாகக் கிடைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பழங்குடியின மாணவர்களின் கல்விக்கும் ஸ்ரீகாந்த் உதவி வருகிறார்.

