பெங்களூரு: கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக, பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு 48வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை அழைப்பாணை அனுப்பியும் பிரகாஷ் ராஜ் நேரில் முன்னிலையாகவில்லை.
இதன் காரணமாக, கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைதாணை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் பிரகாஷ் ராஜ் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.
அவர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தனஞ்செய், “நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணைகள் எதுவும் பிரகாஷ் ராஜுக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை; ஊடகங்கள் மூலமாகவே அவர் இந்தத் தகவலை அறிந்துகொண்டார்,” என்று வாதிட்டார்.
மேலும், அவருக்குப் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்து பிணை வழங்குமாறும் கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த கைதாணையை ரத்து செய்ததுடன், 4,000 ரூபாய் பிணைத் தொகையுடன் (உத்தரவாதத் தொகை) அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

