தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொரோனா பரவல்: மாநிலங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்

1 mins read
b8668675-6728-4dd3-9941-6043e9a31b46
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிர்வாயு, செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்தியாவில் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து பலர் பாதிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிர்வாயு, செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் தொற்றுப் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் பொது இடங்களுக்குச் செல்கின்றனர். எனவே, உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அறிகுறிகள் மோசமடைந்தால் உடனடியான மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, மக்கள் நல்வாழ்வுத்துறையும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

அனைத்துத் துறை செயலாளர்களையும் அமைச்சர்களையும் நேரில் அழைத்து, தனியாக கூட்டம் நடத்தி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவுக்காக 10 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்