மனிதர்கள்மீது பசுக்களை ஓடவிடும் தீபாவளிச் சடங்கு

மனிதர்கள்மீது பசுக்களை ஓடவிடும் தீபாவளிச் சடங்கு

1 mins read
cae0a35d-9d62-4d8a-8f5a-5a81a8a9fd19
படுத்திருக்கும் மனிதர்கள்மீது பசுக்களை ஓடவிடும் சடங்கு. - காணொளிப்படம்

உஜ்ஜைன்: தீபாவளித் திருநாளையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சடங்குகள் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

கற்களை வீசியெறிவது, சாட்டையால் அடிப்பது, பட்டாசுகளை வீசுவது போன்றவை அவற்றில் சில.

அவ்வகையில், மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் மனிதர்கள்மீது பசுக்களை ஓடவிடுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் நினைப்பது நடக்கும் என்று அவ்வட்டார மக்கள் நம்புகின்றனர்.

இதுகுறித்த காணொளியை ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், பிடாவத் என்ற சிற்றூரைச் சேர்ந்த சிலர் தரையில் குப்புறப்படுத்துக்கொள்வதும் அவர்கள்மீது பசுக்களை ஓடவிடுவதும் தெரிகிறது.

வழக்கமாக, தீபாவளிக்கு மறுநாள் இச்சடங்கு நடத்தப்படுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் ‘கௌரா கௌரி’ பூசையின்போது மனிதர்களின் முன்கையில் கசையடி கொடுக்கப்படுகிறது.

அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் தமது கையில் கசையடி பெற்ற காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹலோக் என்ற சிற்றூரில் ‘பத்தர் கா மேளா’ என்ற சடங்கு இடம்பெறுகிறது. அதன்படி, மக்கள் இரு தரப்பினராகப் பிரிந்துகொண்டு ஒருவர்மீது ஒருவர் கல்வீச்சுத் தாக்கிக் கொள்கின்றனர். கல்லடிபட்டவர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதேபோல, குஜராத்திலுள்ள பஞ்சமகால் என்னும் ஊரில் மக்கள் வெடிகளை ஒருவர்மீது ஒருவர் வீசி எறிகின்றனர்.

குறிப்புச் சொற்கள்