ஐநா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மை அதன் நடுநிலைமையிலேயே நிலைத்துள்ளது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாட்டின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் குறிப்பிட்ட நாடுகள் மீதான ஆணைகள், கள நிலவரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
ஐநா பொதுச்சபையில் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை மீதான விவாதத்தில், ஐநாவுக்கான இந்திய நிரந்தரத் தூதரகத்தின் முதல் செயலாளர் பாவிகா மங்கலநந்தன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) உரையாற்றினார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 61வது மனித உரிமைகள் பேரவையின் உயர்நிலைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆற்றிய உரையை திருவாட்டி பாவிகா நினைவுகூர்ந்தார்.
“மனித உரிமைகள் என்பது அரசியல்மயமாக்கல், ஒருதலைச்சார்பு அல்லது இரட்டை வேடம் ஆகியவற்றின் மூலமன்றி, கலந்துரையாடல், திறன் மேம்பாடு, உண்மையான பங்காளித்துவம் ஆகியவற்றின் மூலமாகவே சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்,” என்றார் அவர்.
பேரவை ஒரே குரலில் பேசவும் மனித உரிமைகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டுகளைப் போக்கவும் இந்த அணுகுமுறை மிகவும் இன்றியமையாதது என்று திருவாட்டி பாவிகா குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு, தனது ஏழாவது தவணையாக மனித உரிமைகள் பேரவைக்கு இந்தியா நடப்பாண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“பேரவையின் நம்பகத்தன்மை அதன் நடுநிலைமையிலேயே தங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட நாட்டின் ஈடுபாடின்றி ஒரு குறிப்பிட்ட நாட்டை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் உத்தரவுகள், கள நிலவரத்தை அரிதாகவே மாற்றியமைக்கின்றன. மாறாக, அவை பேரவைக்குள் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன. எனவே, அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துவதுடன், உறுப்பு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் செயல்படும் அனைத்துலகுக்குமான காலமுறை மறுஆய்வு முறையே இதற்கு உகந்த தளமாகத் தொடர்கிறது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு, குறிப்பாக உயிர் வாழும் உரிமைக்கு, பயங்கரவாதம் பேரச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்பதை இந்தியா வலியுறுத்தியது.
“பயங்கரவாதத்தை அறவே சகித்துக் கொள்ளாத கொள்கையின் அடிப்படையில், பேரவை இந்த அச்சுறுத்தலுக்குத் தொடர்ச்சியான கவனத்தை அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று திருவாட்டி பாவிகா கூறினார்.
அனைத்து மனித உரிமைகளும் பாகுபாடின்றி சமநிலையிலும், ஒரே மாதிரியான முக்கியத்துவத்துடனும் அணுகப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
