புதுடில்லி: ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலம் இந்தியாவுக்கு பொருளியல் ரீதியாக பலன் கிடைத்துள்ளதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதி வரை போராடிய இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தத் தொடரின் தாக்கம் குறித்து ஐ.சி.சி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தினமலர் தகவல் தெரிவிக்கிறது.
அதில், இந்த கிரிக்கெட் தொடர் மூலம், இந்தியாவுக்கு 1.39 பில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ.11,637 கோடி) கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் போட்டியை நடத்திய நகரங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் 861.4 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது.
இப்போட்டிகளை 12.5 கோடி பேர் பார்த்து ரசித்தனர். இந்தத் தொடர் காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை 19 விழுக்காடு அதிகரித்தது. நேரடியாகவும், மறைமுகமாகவும் என 48,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.