தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றவாளிகளைப் பாதிக்கப்பட்டவர்களாக ஏற்க இயலாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்

2 mins read
82730790-a374-452c-8770-4e039f132ed6
ஜெய்சங்கர், டேவிட் லாமி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் குற்றவாளிகளைப் பாதிக்கப்பட்டவர்களாக இந்தியா ஒருபோதும் ஏற்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை புதுடெல்லி வந்தடைந்தார். அவரை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்று, பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைக் கண்டித்த பிரிட்டன் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் போராடும். தீங்கு இழைப்போரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக கருதுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது.

“இந்தியா, பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பதை புதிய மைல்கல்லாகக் கருதுகிறோம். இது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உதவும் என்பதுடன் மேலும் பல அம்சங்களிலும் உறவுகளை மேம்படுத்தும்.

“செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், பகுதி மின்கடத்தி, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை நெருக்கடியைச் சமாளித்தல், மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக டேவிட் லாமி குறிப்பிட்டார்.

“மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நமது லட்சியங்களின் தொடக்கம்தான். புதிய உலகளாவிய சகாப்தத்திற்காக இந்தியாவுடன் ஒரு நவீன பங்காளித்துவத்தை பிரிட்டன் உருவாக்குகிறது,” என்றார் லாமி.

கடந்த மாதம் பாகிஸ்தான் சென்றிருந்த டேவிட் லாமி, இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடியையும் திரு லாமி சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும், இருதரப்பு வியூகக் கூட்டாண்மை முன்னேற்றத்துக்கு திரு லாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு இங்கிலாந்தின் ஆதரவை மதிக்கிறோம்,” என்று மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்