புதுடெல்லி: புதுடெல்லியின் பிரசாந்த் விஹார் பகுதியில் இருக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) காலை 7.50 மணியளவில் மர்ம பொருள் வெடித்தது.
இதனையடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காவல் படை பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்தும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும் கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
சமபவம் நடந்த இடத்தையும் நிலத்தடி கழிவுநீர் பாதையையும் ஆய்வு செய்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.
அதேவேளையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.


