உடன்கட்டை ஏறிய பெண்ணின் சாபம்; தீபாவளியைக் கொண்டாட அஞ்சும் கிராமம்

உடன்கட்டை ஏறிய பெண்ணின் சாபம்; தீபாவளியைக் கொண்டாட அஞ்சும் கிராமம்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

09 Nov 2026 - 2:57 pm

2 mins read

ஹமீர்பூர்: ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 8) உலகெங்கும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடினர். வீடுகளிலும் தெருக்களிலும் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், வண்ணமயமான மின்விளக்குகள் ஒளிர, தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஆனால், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்மூ கிராமத்தில் தீபாவளி பண்டிகைக்கான எவ்விதக் கொண்டாட்டமும் அலங்காரங்காரங்களும் இல்லை.

இக்கிராம மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதைத் தவிர்த்து வருகின்றனர். தங்கள் கிராமத்தைத் துரத்தும் ஒரு நீண்டகாலச் சாபமே இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

கொண்டாட்டங்கள் ஏதுமின்றி இதுவரை 72 தீபாவளிகளைக் கடந்துவிட்ட கிராமத்துப் பெரியவர் ஒருவர் இதுபற்றி பகிர்ந்துகொண்டார்.

கிராமவாசி யாரேனும் தீபாவளியைக் கொண்டாட முயன்றால் கிராமத்துக்குத் தீங்கு ஏற்படுவதாக அவர் வேதனையுடன் கூறினார். தீபாவளியைக் கொண்டாடினால் தீ விபத்துகள், இயற்கைச் சீற்றங்கள் முதல் அகால மரணங்கள் வரையிலான பேரிடர்கள் தேடி வரும் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.

சம்மூ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது கணவர் மரணமடைந்தபோது உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது அப்பெண் இனி இங்குத் தீபாவளி ஒருபோதும் கொண்டாடப்படக் கூடாது என்று சாபமிட்டதாக அறியப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு அக்கிராமத்தில் யாரும் சிறப்பு உணவுவகைகளை சமைப்பதில்லை. மீறி முயற்சி செய்தால் ஏதாவது விபரீதம் நிகழ்வதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

சாபத்தைப் போக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தத் தடை மரபு மாறாமல் நீடிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தீபாவளி நாளில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இன்றும் தீபாவளி திருநாளன்று வீட்டில் விளக்கு ஏற்றக்கூட சம்மூ கிராம மக்கள் அஞ்சுகின்றனர். அவர்களில் சிலர் சில சமயங்களில் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதைக் காண பக்கத்து ஊர்களுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்