டேராடூன்: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இம்மாதம் 23ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் பிரசாரத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தரவுகளைக் கொண்டு துல்லியமாக சேகரிக்கப்படும் தகவல்களை (data-driven insights) அவர்கள் உபயோகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொப்பிகள், தாள் விளம்பரங்கள் போன்றவற்றை வழங்கி மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பிரசார நடவடிக்கைகள் இப்போது காணப்படுவதில்லை. நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்குள் நுழைந்துவிட்டோம். அதன் மூலம் வாக்காளர்கள் ஒரு நிமிடத்துக்குள் ஒரு வேட்பாளரின் பின்னணியைத் தெரிந்துகொள்ள முடியும்,” என்றார் அரசியல் கவனிப்பாளர் ஜெய் சிங் ராவத்.
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் ஆஷிஷ் நவ்டியல், “வேட்பாளர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள மட்டும் காணொளி அழைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. வேட்பாளர்களின் வாக்காளர் அட்டைகளை வாக்காளர் ஒரே ‘கிளிக்’கில் பார்க்க வகைசெய்யவும் காணொளி அழைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதா கட்சி (பா. ஜ. க), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் பலர் பிரசாரத்துக்காக இதுபோன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களை நாடுவதாக விளம்பரங்களை அச்சிடும் பணியில் ஈடுபடும் பால்ராஜ் சூரி எனும் ஆடவர் தெரிவித்தார். உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள விளம்பர நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்னிலக்க விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் தொடர்பிலான திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதாக அவர் சொன்னார்.