புதுடெல்லி: இந்தியத் தொழில் நிறுவனங்களைக் குறிவைத்து கடந்த 2023ஆம் ஆண்டு சராசரியாக நாளொன்றுக்கு ஏறக்குறைய 9,000 இணையத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக புதிய ஆய்வறிக்கை தெரிவித்தது.
இணையப் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கி, சென்ற ஆண்டில் மூன்று மில்லியன் இணைய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டு, தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இது, அதற்கு முந்திய 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 47 விழுக்காடு அதிகம்.
“மின்னிலக்கப் பொருளியலையும் உட்கட்டமைப்பையும் வலுப்படுத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இணையவழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான இணையத் தற்காப்பை இந்தியத் தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்த வேண்டும்,” என்று இந்தியாவிற்கான காஸ்பெர்ஸ்கி நிறுவனப் பொது மேலாளர் ஜெய்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
“அந்த அச்சுறுத்தல்களைக் குறைத்து மதிப்பிட்டு தற்காப்பை வலுப்படுத்தத் தவறினால், மின்னிலக்கமயமாக்கத்தின் முழுமையான பயன் கிட்டாமல் போய்விடும். சாத்தியமுள்ள இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் செயல்திறன்மிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இதுவே நேரம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த 2024ஆம் ஆண்டில், தொழில் நிறுவனங்கள் தங்களது இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. காலங்கடந்த அடிப்படை இணையப் பாதுகாப்புத் தொழில்நுட்பம் எல்லாம் இப்போது போதாது,” என்றார் திரு ஜெய்தீப்.
பேரளவுத் தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள், இணையத் தாக்குதல்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவு நிதி சார்ந்த பாதிப்பை எதிர்கொள்வதற்குச் சாத்தியம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
அதனால், பாதுகாப்புத் தீர்வுகளிலும் சேவைகளிலும் அறிவார்ந்த அணுகுமுறைகளைத் தழுவுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

