சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘அக்வான்’ (Akvan) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல், அடுத்த இரு நாள்களில் அதிதீவிரப் புயலாக உருமாறி ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு, அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து வருகிறது.
“செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) மாலை மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாக மாறும். பின்னர், நவம்பர் 19ஆம் தேதி இரவு அதிதீவிரப் புயலாக ஆந்திரக் கடற்கரைக்கு அருகே நிலைகொள்ளும்,” என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் ஆந்திரா யனாம் கடலோரப் பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தைப் பொறுத்தவரை, வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 17, 20 ஆகிய தேதிகளில் கனமழையும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று வாரங்களில் உருவாகும் மூன்றாவது புயல் இது என்பதால், ஒடிசா, ஆந்திர மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளின் வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நவம்பர் 19 முதல் 21 வரை மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
