அர்னாப் புயல்: ஆந்திராவில் அறுவர் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

அர்னாப் புயல்: ஆந்திராவில் அறுவர் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

படம்: ஏஎஃப்பி

29 Oct 2026 - 6:25 pm

1 mins read

திருப்பதி: அர்னாப் புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

பல பகுதிகளில் வியாழக்கிழமையும் (அக்டோபர் 28) மின் விநியோகம் தடைபட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கியும் வீடுகள் இடிந்தும் உயிரிழப்புகள் நேர்ந்ததால் பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.

எனினும் அதிகாரபூர்வமாக ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என ஆந்திர அரசு அதிகாரி கூறினார்.

புயலால் குறைந்தது 15,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன என்று முதல்வர் என் சந்திரபாபு நாயுடு தமது அறிக்கையில் தெரிவித்தார்.

கோணசீமா, மேற்கு கோதாவரி தவிரப் பெரும்பாலான மாவட்டங்களில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை அரசாங்கம் முன்கூட்டியே அடையாளம் கண்டது. அதன் மூலம் உயிரிழப்புகளையும் பொருட்சேதத்தையும் குறைக்க முடிந்தது என்று திரு நாயுடு சுட்டிக்காட்டினார்.

மார்ஷல் தீவுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று ஆந்திரக் கடற்கரை அருகே தரைதட்டியது.

இதற்கிடையே அர்னாப் புயலால் ஏனாம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்