‘முரசு’ புயல் கரையைக் கடந்தது

‘முரசு’ புயல் கரையைக் கடந்தது

படம்: ஏபிபி நியூஸ்

03 Nov 2026 - 2:43 pm

2 mins read

நெல்லூர்: வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) அதிகாலை ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர்-நர்சாபூர் இடையே முழுமையாகக் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகத் தோன்றிய இந்த அமைப்பு, தொடர்ந்து வலுப்பெற்று நவம்பர் 1ஆம் தேதி புயலாக மாறியது.

பின்னர் புயலாக உருவெடுத்த ‘முரசு’, நள்ளிரவு 1 மணி முதல் ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5 மணிக்குள்ளான இடைப்பட்ட காலத்தில் கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

கடலோர ஆந்திரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பங்கள் சேதமடைந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக, இப்புயல் சென்னைக்கு வடகிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஆந்திர மாநில அரசு, கரையோர மக்களுக்காகப் பல முகாம்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து ஆந்திராவின் விஜயவாடா, ராஜமுந்திரி விமானங்களுக்குச் செல்லும் இரு விமானங்களும் அங்கிருந்து சென்னை வரும் இரு விமானங்களும் ரத்தாயின.

ஆந்திராவில் ‘முரசு’ புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும் அங்கு நவம்பர் 5ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்