புயல் நிவாரணம்: ஆந்திராவிற்கு உதவும் தமிழ்நாடு

புயல் நிவாரணம்: ஆந்திராவிற்கு உதவும் தமிழ்நாடு

கோப்புப் படம்: சோஷியல் நியூஸ்

02 Nov 2026 - 6:27 pm

1 mins read

சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான ‘அர்னாப்’, ‘முரசு’ தீவிரப் புயல்கள் காரணமாக ஆந்திரப் பிரதேச மாநிலம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலம் தமிழகத்திடம் உதவி கோரியுள்ளது.

‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சுழல்காற்றினால், அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் மரங்களும் வேரோடு சாய்ந்து மின் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. அந்தப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் ‘முரசு’ புயலும் ஆந்திராவைப் புரட்டிப்போட்டுள்ளது.

இந்த அசாதாரணச் சூழலைக் கையாளவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டமைப்புகளை விரைவாகச் சீரமைக்கவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவசர உதவி கோரினார்.

புயல் நிவாரணப் பணிகளுக்காகத் தமிழகத்தில் இருந்து கூடுதல் களப்பணியாளர்களையும் சீரமைப்பு இயந்திரங்களையும் ஆந்திராவிற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர முதல்வரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், அண்டை மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடத் தமிழக மின்சாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மீட்பு, சீரமைப்புப் பணிகளுக்காகத் தமிழக மின்வாரிய ஊழியர்களையும் சிறப்புக் கருவிகளையும் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்