தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யாகி சூறாவளி: மியன்மார், லாவோஸ், வியட்னாமுக்கு இந்தியா நிவாரண உதவி

1 mins read
b5c2862e-82e1-4fa9-b1d9-c49b464d2efe
மியன்மாருக்கு 10 டன் அத்தியாவசியப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியா, யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார், லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு மனிதநேய உதவி வழங்கும் ‘ஆப்பரேஷன் சத்பவ்’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தியக் கடற்படைக் கப்பலான ‘ஐஎன்எஸ் சத்புரா’ மூலம் 10 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்கள் மியன்மாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மளிகைப் பொருள்கள், உடைகள், மருந்துப் பொருள்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) எக்ஸ் தளப் பதிவில் இதைத் தெரிவித்தார்.

மேலும், இந்திய விமானப் படையின் ‘சி-130ஜே’ வகை ராணுவ விமானத்தின் மூலம் வியட்னாமுக்கு 35 டன் நிவாரணப் பொருள்களும் லாவோசுக்கு 10 டன் நிவாரணப் பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

வியட்னாமுக்கு அனுப்பப்பட்ட பொருள்களில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் கருவிகளும், குடிநீர்க் கலன்கள், போர்வைகள், சமையல் பாத்திரங்கள், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் போன்றவை அடங்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மின்னாக்கிகள் (generator sets), தண்ணீர்ச் சுத்திகரிப்புக் கருவிகள், கொசுவலைகள் போன்றவை லாவோசுக்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார். மியன்மாருக்கான நிவாரண உதவிப் பொருள்கள், விசாகப்பட்டினத்திலிருந்து யங்கோனுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆசியாவில் இந்த ஆண்டு வீசிய ஆகக் கடுமையான புயலாகக் கருதப்படும் யாகி சூறாவளியால் வியட்னாமில் 170 பேரும் மியன்மாரில் 40 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புயல் வெள்ளத்தால் மியன்மார், லாவோஸ், வியட்னாம் ஆகியவை பேரளவில் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்