கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: டி.கே. சிவகுமார்

கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: டி.கே. சிவகுமார்

கோப்புப் படம்: ஜஸ்ட் டயல்

26 Oct 2026 - 5:16 pm

1 mins read

பெங்களூர்: பெங்களூரில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்குவதில் உள்ளூர் கன்னடர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் எச்சரித்துள்ளார்.

பெங்களூரில் இயங்கி வரும் சில நிறுவனங்கள் கன்னட மொழி பேசுபவர்களைப் புறக்கணித்துவிட்டு பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி இளம் பெண் ஒருவர் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து, கர்நாடக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சில நிறுவனங்கள் தெலுங்கு, தமிழ் பேசுபவர்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் கன்னட மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள சுயவிவரக் குறிப்புகளை (Resumes) நிராகரிப்பதாகவும் அப்பெண் சாடியுள்ளார்.

கர்நாடகாவில் கன்னடர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் வேலைவாய்ப்புகளுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்காது என அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் வளர்ச்சிக்கு வித்திட்ட உள்ளூர் திறமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றே கன்னடர்களைப் புறக்கணிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார் திரு சிவகுமார்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. உள்ளூர் அமைப்புகள் அரசின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள நிலையில், இத்தகைய கட்டுப்பாடுகள் முதலீடுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்